தபு ஷங்கர் கவிதைகள் 1
துடிப்பதை விட
உன்னை நினைப்பதற்கே
நேரம் சரியாக இருக்கிறது என் இதயத்திற்கு.
--------------------------------------------------------------------------------------------------------------
எனது அறையின் தினசரி காலண்டர்கூட
கேலி பேசுகிறது என்னை.
முதல் நாள் உன்னைப் பார்த்திருந்தால்
அந்தத் தேதியை மிகமெதுவாகக் கிழிக்கிறேனாம்.
பார்க்கவில்லையெனில் பிய்த்துக் கசக்கி எறிகிறேனாம்.
--------------------------------------------------------------------------------------------------------------
இவை இப்படித்தான் என்று
நான் நினைத்துக் கொண்டிருப்பவற்றைக் கூட
எவ்வளவு சுலபமாய் நீ பொய்யாக்கி விடுகிறாய்..
உதிர்வதென்பது எப்போதும் சோகம் தான்
என்கிற என் நினைப்பை
உன் உதட்டிலிருந்து உதிர்கிற
ஒரு சின்னப் புன்னகை பொய்யாக்கி விடுகிறதே.
-------------------------------------------------------------------------------------------------------------
உன் கனவுகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தது எது தெரியுமா...
நீயும் நானும் கடற்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது '
பேசியது போதும் வா வீட்டுக்குப் போகலாம்'
என்று ஓரமாய் நின்று உன் குடும்பமே கெஞ்சிக் கொண்டிருந்ததே
அந்தக் கனவுதான்.
--------------------------------------------------------------------------------------------------------------
உன் கனவுகளைக் காணத் தொடங்கிய
காலத்திற்கு முன்பும் எனக்குச்
சில கனவுகள் வ்ந்ததுண்டு...
வண்ணத் திரைப்படங்கள் வருவதற்கு முன்பு வந்த
கறுப்பு வெள்ளைத் திரைப்படங்களைப் போல.
--------------------------------------------------------------------------------------------------------------
செடியிலும் பூத்துக்கொண்டே
உன்முகத்திலும் பூக்க
எப்படி முடிகிறது இந்தப் பூக்களால்?
--------------------------------------------------------------------------------------------------------------
நீயோ சூரிய வெளிச்சம் முகத்தில் படாமலிருக்க
புத்தகத்தால் உன் முகத்தை மறைத்துக் கொள்கிறாய்.
சூரியனோ உன்னைப் பார்க்க முடியாத கோபத்தில்
எல்லோரையும் சுட்டெரித்துக்கொண்டிருக்கிறது.
--------------------------------------------------------------------------------------------------------------
எனக்கு லீப் வருடங்கள் ரொம்ப பிடிக்கும்.
அந்த வருடத்தில்தான்
இன்னும் ஒரு நாள் அதிகமாய் வாழலாம் உன்னுடன்!
--------------------------------------------------------------------------------------------------------------
என்னுடையது என்று நினைத்துதான்
இதுவரையில் வளர்த்து வந்தேன்.
ஆனால் முதல்முறை உன்னைப் பார்த்ததுமே
பழக்கப்பட்டவர் பின்னால் ஓடும் நாய்க்குட்டி மாதிரி
உன் பின்னால் ஓடுகிறதே இந்த மனசு.
--------------------------------------------------------------------------------------------------------------
நீ உறங்குகிறாய்...
எல்லா அழகுகளுடனும்.
உன் கண்களை மூடியிருக்கும் இமைகளில் கூட
எனக்காக விழித்திருக்கிறது
உன் அழகிய காதல்.
--------------------------------------------------------------------------------------------------------------
என்னிடம் கொட்டிக் கிடக்கும் காதலை
எதைக் கொடுத்தும் வாங்கிவிட முடியாது,
காதலைத் தவிர!
-------------------------------------------------------------------------------------------------------------
சிந்திய மழை மீண்டும் மேகத்துக்குள் போவதில்லை
ஆனால் ஒவ்வொரு முறையும் நீ சிந்தும் வெட்கமெல்லாம்
மீண்டும் உன் கன்னத்துக்குள்ளேயே போய்விடுகிறதே!
--------------------------------------------------------------------------------------------------------------
இன்று காதலர்தினம்.
எல்லா காதலரும் ரோஜாத் தோட்டத்தில் பூப்பறித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் தோட்டத்தின் வெளியே நின்று கொண்டிருக்கிறேன்.
எல்லோரும் பூப்பறித்துச் சென்ற பிறகு தோட்டத்துக்குள் செல்வேன். காதலுக்காக பூக்களையெல்லாம் பரிசளித்துவிட்டு
காம்புகளோடு நிற்கும் ரோஜாச்செடிகளோடு
பரிமாறிக்கொள்வேன், உனக்கான என் காதலை!
---------------------------------------------------------------------------------------------------------------
நீ தொடுகிற பூக்களையெல்லாம்
என்னால் தொட முடிந்ததே இல்லை.
நீ தொட்டது எப்படி எனக்குத் தெரியும் என்கிறாயா.
உன் விரல்களைத்தான்
பூக்கள் அப்படியே வைத்திருக்கின்றனவே.
--------------------------------------------------------------------------------------------------------------
உன் காதலியாய் இருப்பது எனக்கு பிடிக்கவே இல்லை
கால்பந்து ஆடிவிட்டு நீ களைப்போடு சாய்கையில்
ஓடிவந்து உன்னை இழுத்து
மடியில் போட்டுக் கொள்ளத் துடிக்கும் என் ஆசையை
உன் காதலியாய் என்னால் நிறைவேற்ற முடியவில்லை
அதனால் உடனே என்னை மனைவியாக்கிக்கொள்.
No comments:
Post a Comment